Tuesday, June 14, 2011

பிரதமருடனான சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது: ஜெ.



பிரதமர் மன்மோகன் சிங்குடனான தமது சந்திப்பு தமிழகத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். 

அப்போது தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள், மின்பற்றாக்குறை, இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்தார். 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா,பிரதமருடனான தமது சந்திப்பு தமிழகத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது என்றார். 

தமிழக நலன்களுக்காக மத்திய அரசுடன் தாம் மோதல் எதிலும் ஈடுபட போவதில்லை என்றார்.

காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கப்போகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, அரசியல் அணி மாற்றம் குறித்து இப்போது பேசுவது உகந்ததல்ல என்றார். 

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து தம்மை யாரும் இது தொடர்பாக அணுகவில்லை என்பதால்,ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சேருவது குறித்த கேள்வியே எழவில்லை என்றும் ஜெயலலிதா கூறினார்.

மத்திய அரசுடன் நீங்கள் நெருங்குவது குறித்து திமுக அச்சமடைகிறதே என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்தபோதிலும், தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்,அப்படி மாறன் ராஜினாமா செய்யவிலை என்றால் பிரதமர் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

சோனியா காந்தியை ஏன் சந்திக்கவில்லை என்று கேட்டபோது, அவர் திமுக அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருப்பதால்,அவரை சந்திப்பது அரசியல் ரீதியாக சரியாக இருக்காது என்று பதிலளித்தார்.

மேலும் பிரதமருடனான நடத்திய பேச்சின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனை ஆகியவை முக்கியமாக இடம்பெற்றதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment